கை கால்களில் விறைப்பு வருவது எதனால்

உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது புதினமானது அல்ல. கையை எங்காவது இசகு பிசகாக வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைந்தது போலவும், கூச்சம் போல அல்லது அதிர்வு போலவும் தோன்றுவதை உதாரணம் கூறலாம்.

ஆனால் இது கைகளில்தான் ஏற்படும் அல்ல. கைகளில் கால்களில் விரல்களில் மேல்கைகளில் தொடைப்புறத்தில் தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.

சுவாரஸ்யமான காரணங்கள்

மருத்துவ மாணவர்களாக இருந்த காலத்தில் Honeymoon palsy என விரிவுரையாளர் எனக் கற்பிக்கும்போது கிளர்ச்சியடைந்தோம். திருமணமான முதலிரவில் புது மனைவியுடன் கலந்து கலந்து களைத்து அவளும் சோர்ந்து உங்கள் கைளிலிலேயே தலை வைத்துத் தூங்கியிருப்பாள். காலையில் விழித்து எழும்போது உங்கள் பெருவிரலும், சுட்டி விரலும் நீட்டி மடக்க முடியாதபடி மரத்துக் கிடப்பதைக் கண்டு பதறுவீர்கள். ராசி அற்ற பெண் என மனதுள் திட்டுவீர்கள். இது median nerve நீண்ட நேரம் அழுத்தப்படதால் ஏற்பட்டதாகும். தானாகவே குணமாகும்.

இதே போன்றதே Saturday night palsy என்பதுவும் ஆகும். வார இறுதிநாள் போதையில் கதிரையின் கைப்பிடியில் கை போட்டபடி தூங்கிய பின் காலை விழிதெழும்போது radial nerve அழுத்துப்படுவதால் ஏற்படுவதாகும்.

வேறு பல காரணங்கள்

மேலே கூறிய கிளுகிளுப்பான காரணங்கள் தவிர, வேறு ஏராளமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.

முள்ளந் தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும்.

அதேபோல நாரிப்பகுதி முள்ளந் தண்டு பாதிப்புறுவதால் ஏற்படும் வலி விறைப்பு போன்றவை கால்களில் வெளிப்படும்.

நரம்புக் கொப்பளிப்பான் பற்றி அறிந்திருப்பீர்கள். ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டும் கொப்பளங்கள் தோன்றும். இதனால்; வலி எரிவு போன்ற பாதிப்புகளை அந்த நரம்பின் பாதையில் மட்டுமே கொண்டுவரும். சிலரில் இந்த வலியானது கொப்பளங்கள் கருகி நோய் மாறிய பின்னரும் நீண்ட காலத்திற்கு தொடரும்.

சிலரில் பெருவிரல் சுட்டு விரல், நடுவிரல் அடங்கலான கைகளின் வெளிப்புறத்தில் வலி, விறைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். இதை Carpal tunnel syndrome என்பார்கள். இது மணிக்கட்டின் உட்புறம் ஊடாக உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு வரும் நரம்பு அழுத்தப்படுவதால் வருவதாகும். பொதுவாக மூட்டுவாதம், தைரொயிட் நோய்கள். அதீத எடை போன்றவை இருப்பவர்களில் அதிகமாக ஏற்படும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பெண்ணுக்கு இருந்தது இந்த நோய்தான். அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இவருக்கு அவ்விடத்தில் ஊசி போட நேர்ந்தது. வேறு சிலருக்கு நரம்பில் ஏற்படும் அழுத்ததைக் நீக்க சிறிய சத்திர சிகிச்சையும் தேவைப்படுவதுண்டு.