பூமியை குளிர வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும்நிலையில், அதனைக் குளிர்விக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சூரியனிலிருந்து வெளிவரும் அபாயகரமான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து பூமியின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பாதுகாத்து வருவது ஓசோன் படலம்.

ஆனால், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கார்பன்டைஒக்சைட் கலந்த புகை மற்றும் பசுமை இல்ல வாயுக்களால் ஓசோன் படலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, பூமியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதனால் அண்டார்ட்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடல் மட்டம் அதிகரிப்பால் கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலையிலும் மாறுபாடுகள் ஏற்பட்டு இயற்கை அழிவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் புதிய முயற்சியாக ஹார்வார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

இதற்கு முன்பு சல்பர்டைஒக்சைட் மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கண்டறிந்துள்ள கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.